10/01/2010

காமினி (சவால் சிறுகதை)





           காமினி நான் எழுதும்  முதல் கதை, சொல்லப்போனா நான் எழுதுவதே இதுதான் முதல் தடவை. என்னை எழுத தூண்டிய பெரும்பாலான பதிவர்களின் எழுத்தில் மிக முக்கியமானது ஜாக்கி சேகரின் எழுத்தும் எண்ணங்களும் ஆகும் . நன்றி.  அதே நேரத்தில் பரிசல்காரனுக்கும் என் நன்றிகள். அவர் மட்டும் போட்டி அறிவிக்காவிட்டால், எப்படி எதில் ஆரம்பிப்பது என்று தெரியாமல் தேங்கியிருந்த எனக்கு ஒரு வழி தெரிந்திருக்காது. முன்னுரை போதும் என்று நினைக்கிறேன். இனி என் முதல் முயற்சி .....

காமினி (சவால் சிறுகதை)



       மருந்து நெடியும் டெட்டால் வாசனையும் மூக்கின் வழியாக மூளைக்கு அது மருத்துவமனைதான் என்று குறுஞ்செய்தி அனுப்பின .பச்சைப்பூ போட்ட மஞ்சள் பாவாடையில் இருந்த சிறுகுழந்தை அம்மாவிடம் ஊசி வேண்டாம் என்று சோகமாய் சினுங்கிக்கொண்டிருந்தது .


         நாலாப்பு கமலா டீச்சர் எப்போதும் டெட்டால் போட்டுத்தான் கை கழுவுவார்.  என்னையும் அதிலேயே கழுவச்சொல்வார்.  இப்படித்தான் டெட்டால் வாசனை எனக்கு பிடித்துப்போனது.  வெயிட் எ செகண்ட்! நான் ஏன் இங்கு வந்தேன்? ஆங்! காமினியை பார்க்கத்தானே! தேடுதலின் 17 வது நிமிடத்தில் அந்த அறையை கண்டுபிடித்தேன். டாக்டர் ஏதோவொரு  ட்யுபை அவளின் கையில் சொருகிக்கொண்டிருந்தார். அவள் காமினியேதான். டாக்டர் கதவின் பக்கம் திரும்பினார். பட்டென்று ஒளிந்து கொண்டேன். டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு வயர்களைஎல்லாம் பிடுங்கி விட்டு அருகில் இருந்த ஜன்னலைத்திறந்து வெளியே குதித்தாள்.நானும் அந்த ஜன்னல் வழியே குதித்து அவளைத் தொடர்ந்தோடினேன் "காமினி.. நில்... சிவா உன்னை கொல்வதற்கு காத்துக் கொண்டிருக்கிறான்" என்று கத்தியபடியே.
  பலத்த காற்றின் ஆடும் மரங்களுக்கிடையே ஓடிய  காமினிக்கு எதுவும் கேட்கவில்லை.  ஆனால் தூரத்தில் ஒருவன் துரத்தி வருவதை மட்டும் கண்டாள் ;ஓட்டத்தின் வேகத்தை அதிகப்படுத்தினாள்.  சிறிது தூரம் ஓடிய பின் நின்று திரும்பிப்பார்த்தாள்.  யாரும் தொடரவில்லை என்று தெரிந்ததும் ஆசுவாசப்படுத்திக்கொண்டாள்.  " யாரிவன்? ஒருவேளை சிவா அனுப்பிய ஆளாக இருப்பானோ ? " என்று காமினி எண்ணிக்கொண்டிருக்கும்போதே பின்னால் சிவா குரல் கேட்டது . 
        " இப்படி தனியா வந்து  மாட்டிக்கிட்டியே " என்று எள்ளினான் இன்ஸ்பெக்டர் சிவா.  அந்த வைரம் எத்தனை கோடி பெறும் தெரியுமா ? இந்த நாத்தம் பிடுச்ச காக்கிச்சட்டைய தூக்கிபோட்டுட்டு  மலேசியா பறந்திருவேன் " என்றான் . " என் உயிரே போனாலும் வைரம் எங்க இருக்குன்னு  சொல்ல மாட்டேன்டா" கர்ஜித்தாள் காமினி.  "ஸாரி...  எனக்கு வேற வழி தெரியல "  என்று காமினியின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.


           தலை தெறிக்க ஓடிக்கொண்டிருந்தேன். காமினி  எங்கே போனாள் என்றே தெரியவில்லை . அப்பாவை ரிஷப்சனில் விட்டது நினைவுக்கு  வந்தது . அத்திருப்பத்தின் முடிவில் காமினி  தூரத்தில் தெரிந்தாள்.  பக்கத்தில் ஒருவன் நின்று ஏதோ பேசிக்கொண்டிருந்தான் . திடிரென்று துப்பாக்கியை எடுத்து அவள் நெற்றியில் வைத்தான் . யோசிக்கக்கூட அவகாசமின்றி ஓடி வந்த வேகத்தில் அவன் மீது பாய்ந்தேன். நிலைகுலைந்த அவன் அங்கிருந்த மரத்தில் மோதி மயக்கமானான் . "இவன் சிவா தானே .." என்றேன் காமினியிடம் . "உனக்கு எப்படி தெரியும்.. யார் நீ... " என்றாள் காமினி. ஏழே நிமிடத்தில் அனைத்தையும் சொல்லி முடித்தேன் .என்னை குழப்பமாய் பார்த்தாள். "நான் உங்களைக் காப்பாற்றிவிட்டேன் .."என்று சந்தோஷக் கூச்சலிட்டேன் . அப்போது வழக்கமாய் வரும் பின்னந்தலைவலி ஆரம்பித்தது.  கண்கள் இருட்டியது. தூரத்தில் ஆட்கள் ஓடி வரும் சத்தம் கேட்டது. நான் மயங்கிக் கொண்டிரு..............
                 
         காமினி காலிங் பெல்லை அழுத்தினாள். குழப்பம் கொட்டிக் கிடந்தது அவள் முகத்தில். கதவைத் திறந்த பரந்தாமன் " காமினி.. வெல்டன்.. எப்படியோ போலிஸ் கண்ல மண்ணை  தூவிட்டு இந்த வைரத்தைக் கொண்டு வந்துட்டியே " என்றார் ."அது இருக்கட்டும் சார்.. பட் எவனோ ஒருத்தன் சிவா கிட்ட இருந்து என்னை காப்பாத்துனான்... நீ வச்சிருக்கிற வைரம் நல்ல காரியத்துக்குத்தான் னும், நீ கெட்டவ இல்லன்னும் சொன்னான்.... உங்க பேரைக் கூட  சொல்லி நலம் விசாரிச்சான்..யாரவன்.. அவனுக்கு எப்படி இதெல்லாம் தெரிஞ்சது னு தெரியலை... காலடிச்சத்தம் கேட்டு ஓடி வந்துட்டேன் .. மேலும் அவன் இன்டர்நெட், பரிசல்காரன், சவால் கதை என்றெல்லாம் உளறினான் ..." என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள்.
         கண்கள் வி.......ழி......த்....த.. போது நான் மருத்துவமனையில் இருந்தேன் . வெளியே அப்பா டாக்டரிடம் பேசிக் கொண்டிருந்தது கேட்டது.   "  "  ரெண்டு வருஷத்துக்கு முன்னால, சரியா சொல்லனும்னா, 2010 செப்டம்பர் பாதியிலிருந்து அவன்ட்ட வித்தியாசத்த பாத்தோம்...நவம்பர் 15 க்கு மேலதான் சுத்தமா மாறிட்டான்... காமினி, பரிசல், வைரம் னு மாறி மாறி உளறிட்டே இருந்தான்... இதுவரைக்கும்  எந்த வன்முறையிலும் இறங்காதவன், அந்த இன்ஸ்பெக்டர போட்டு அடிச்சிருக்கான்னா, எனக்கு ரொம்ப பயமாயிருக்கு டாக்டர் ...நீங்கதான்எப்படியாவது அவனை குணப்படுத்தணும்..."""  "    

          ரிசப்ஷன் டிவியில் அழகி ஒருவள் இன்று பிறந்தநாள் காணும் நடிகரும் கோ.கு.மா.கா.  கட்சித் தலைவரும் ஆன ரஜினிகாந்தை வாழ்த்திக் கொண்டிருந்தாள். கீழே ""இன்னும் இரு வாரங்களில் உலகம் அழியுமா..? அழியாதா..? அறிய சன் நியுஸ் காணத் தவறாதீர்..."" என்று கீழே ஓடிக் கொண்டிருந்தது.




                                            ---முற்றும்---


இதற்கு "பரிசலின் E.S.P. பவர் " என்று டைட்டில் வச்சிருக்கலாமோ ......     

















4 கருத்துகள்:

  1. உங்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன

    பதிலளிநீக்கு
  2. ஹ்ம்ம்.... கொஞ்சம் புரியல....
    இன்னொருதடவ படிக்கணும் போல இருக்கு !
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. இன்னொரு கதை நக்கலா இருந்துச்சுன்னா நீங்க ஒரு படி மேலே போயிட்டீங்கனு தோணுது.
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. நன்றிங்க தேசாந்திரி..

    நன்றி அப்பாதுரை..

    பதிலளிநீக்கு